தமிழ் அரசியல் வாதிகளின் பாதை தவறு என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக கடற்தொழில் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியா அரச விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற கட்சியின் உறுப்பினர்களிற்கான கூட்டத்தில் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக நாம் அறிவிக்கமுடியும்.
இன்று எமது மக்கள் துன்பங்களை அனுபவிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்து வருகின்றனர். கோழி கூவி விடியாது. ஆனால் விடியும் நேரத்தை பார்த்து கோழி கூவும்போது மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் ஏற்படலாம். பிரச்சனைகளை தீராப்பிரச்சனையாக வைத்திருப்பதே தமிழ்தரப்புகளின் எண்ணம்
அவர்களின் பாதை தவறு என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அன்று நான் சொன்னதை கேட்டிருந்தால் இந்த இழப்புகளும் அழிவுகளும் வந்திருக்காது. நாம் சரியாக தான் பயணிக்கிறோம். எமது கருத்துக்கள் போதிய அளவு மக்கள் மத்தியில் செல்லவில்லை. அதுவே எங்களுடைய குறைபாடு. அப்படி சென்றிருந்தால் இழப்புகள் குறைந்திருக்கும்.
தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலுக்கே சென்றிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது.
எனவே கிடைக்கின்ற சந்தர்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்களும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். அந்த இலக்கினை நோக்கிய கொள்கைகளை ஏற்ப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறோம்.
அண்மையில் பல்கலைகழக மாணவர்கள் எமது கடற்படையை விமர்சித்து, இந்திய கடற்தொழிலாளர்கள் தமிழர்கள் என்றபடியால் தான் கொல்லப்பட்டார்கள் என்ற ஒரு பொய்யான ஒன்றை, விளக்கம் இல்லாமல் சொல்லியிருந்தார்கள்.
ஆனால் 1971 காலப்பகுதியில் அரசிற்கெதிராக ஆயுதம் தூக்கியது மக்கள் விடுதலை முண்ணணி. அதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் சிங்கள இளைஞர் யுவதிகள் தான். அவர்களையும் தமிழர்கள் என்றா கொன்றது? இல்லையே. அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் அடக்கப்பட்டார்கள்.
எனவே மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு அதிக வாக்குகளையும் ஆசனங்களையும் தந்தால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற விடயத்தை செய்துகாட்டுவேன். செய்யாமல் நான் எதனையும் சொல்வதில்லை.
இந்த நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாக உள்ளது. அந்தவகையில் தீவுப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சீன நிறுவனம் ஒன்றிற்கு கிடைத்துள்ளது. அது தற்செயலாக நடந்த ஒன்று. இந்தியாவும் அதற்கு விண்ணப்பித்திருந்தது. அதை தீர்மானித்தது அரசாங்கம் அல்ல. ஆசிய அபிவிருத்தி வங்கியே. பூகோள அரசியலுக்காக அது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.