கொரோனா பரவல் தடுப்பு சார்ந்த கண்டுபிடிப்புகளின் காப்புரிமை இரத்து செய்யப்பட வேண்டும் என உலக வர்த்தக மையத்தில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பத்தை ஏற்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நான்கு முதன்மை குடியரசு கட்சி செனட்டர்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடனுக்கு செனட்டர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்க வேண்டாம் எனவும், அதன்மூலம் அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஊக்குவிக்கலாம் எனவும் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் உலக வர்த்தக மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. அவர்களுடைய கோரிக்கையைஏற்று கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் திடீரென்று அதிகரித்துவிடுவார்கள்.
மேலும் அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை ரத்து செய்வதன்மூலம் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன. ஆனால் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம் மட்டுப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், கொரோனா தொடர்ந்து உருமாற்றம் பெற்றுவரும் நிலையிலும் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்பு களும் தொடர்ந்து செயல்படுத் தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் காப்புரிமை ரத்து செய்யப்பட்டு யாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உண்டாக்கினால் நோய் காக்கும் தடுப்பூசிகளின் தரம் குறித்த அச்சமும் உண்டாகும். கொரோனா பரவலைத் தடுப்பதில் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் உதவிகளை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. அப்படியிருக்க அமெரிக்க கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்வதை ஒப்புக்கொள்வது கொரோனா பரவலைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கே எதிரானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.