27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும்: சுரேஷ் பிறேமச்சந்திரன்

இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க. பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கையின் மூலம் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளது. இலங்கையின் முதலாவது சுதந்திர அரசாங்கம் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கிய போதும் இந்தியா அதனைக் கண்டும் காணாமல் இருந்தது.

அதன் பின்னர் இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக அவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற லால்பகதூர் சாஸ்திரியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் ஊடாக பெருமளவான பெருந்தோட்ட தொழிலாளர்களை நாடுகடத்த ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக பெருந்தோட்ட
தொழிலாளர்களின் இருப்பு, தனித்துவம், பலம் ஆகியவை கேள்விக்குள்ளாக்கப்பட்டன, அவர்கள் தமது உறவுகளையும் பிரிந்தனர். அதுமட்டுமின்றி எஞ்சியவர்களும்கூட வாக்குரிமையற்றவர்களாகவே நீண்டகாலம் இருந்து வந்தனர்.

லால்பகதூர் சாஸ்திரியின் பின்னர் அமரர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாராநாயகவுடனான தனது நட்பை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்தியாவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் கச்சத்தீவை
இலங்கைக்கு நன்கொடையாக வழங்கினார்.

மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்துமே தமிழ் மக்களைப் பாதிப்பதாக இருந்தும்கூட இந்திய-இலங்கை உறவை சுமூகமாக வைத்துக்கொள்வதற்காக இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களதோ, இலங்கைத் தமிழர்களதோ அல்லது
தமிழகத் தமிழர்களது ஒப்புதல்கள் இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனாலும்கூட, நல்லெண்ண சமிக்ஞைகள் அனைத்தையும் இலங்கை மதித்து நடந்துகொண்டதா என்பது கேள்விக்குறியே.

சீன-இந்திய யுத்தத்தின்பொழுதும், பாகிஸ்தான்-இந்திய யுத்தத்தின்போதும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையையே இலங்கை அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும்கூட, இந்திய அரசு இலங்கையுடனான தனது உறவை மேம்படுத்துவதில் அவதானமாக இருந்தது.

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவினரால் 1971இல் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போது இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி அதனை ஒடுக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியது. அதேபோல் இலங்கை
இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பாக சுனாமியின்போது ஏற்பட்ட பேரிழப்புகளின்போது இந்திய அரசின் உதவிகளை இலங்கை ஏற்றுக்கொண்டது. ஆனால் தனது தேவைகள் முடிந்துபோனதும் மீண்டும் இந்திய எதிர்ப்பு வாதத்திற்குள் செல்வது இலங்கை அரசின் வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றது

இப்பொழுது அமைச்சரவை அமைச்சர்களும், அரச தரப்பின் முக்கியஸ்தர்களும் ஒருபக்கத்தில் இந்திய அரசாங்கத்தைக் காரசாரமாக விமர்சித்துக்கொண்டே, ஜெனிவாவில் இந்திய அரசின் ஆதரவை வேண்டி நிற்கின்றார்கள்.

137கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டிற்கு அதன் பாதுகாப்பு என்பது முக்கியமானது. அதனைக் கேள்விக்கு உள்ளாக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய விரோதச் செயற்பாடாகவே கருதப்படும். இன்று இலங்கை அரசாங்கம்
அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றது. தனது அண்டை நாடாக இந்தியா இருக்கின்றபோது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்குவதென்பது இந்தியப் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்க முடியாது.

என்னதான் இது வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கொடுக்கப்பட்டது என்று கூறினாலும்கூட, நீண்ட நோக்கில் சீனா அதனை தனது இராணுவ நடவடிக்கைக்குப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமுமில்லை. இதனைப் போலவே புதிதாக உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தின் அரைவாசிப் பகுதியையும் சீன அரசாங்கத்திற்கே தானமாக வழங்கப்பட்டுவிட்டது என்பதும் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை சீனாவிற்கு வழங்கியிருப்பதும், கிழக்கு முனையத்தை இந்தியாவிற்குத் தருவதாகச் சொல்லி பின்னர் மறுத்திருப்பதும் இந்தியாவின்
பாதுகாப்பிற்கு உகந்த செயல்களாக அமையமாட்டாது.

இவை மாத்திரமல்லாமல், இந்தியாவிற்கு மிகவும் அண்மையில் இருக்கக்கூடிய இலங்கைக்குச் சொந்தமான நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகியவற்றை
மாற்றுமின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்காக சீனக் கம்பெனிக்கு வழங்கியிருப்பதும்
இந்தியாவிற்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஏற்புடைய செயலல்ல.

இவையெல்லாம் வெறும் வர்த்தக நோக்கச் செயற்பாடுகள் என்று இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமுமில்லை. இவ்வாறான நிலையில்தான், இலங்கை அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் தன்னைப் பாதுகாக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் அவர்கள் இந்து பத்திரிகைக்குக் கொடுத்துள்ள நேர்காணலில், இந்தியா தமது அயல்நாடென்றும், அவர்கள் தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றும், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறியிருப்பதுடன், ஆகவே அவர்கள் எம்மை ஆதரித்தே ஆகவேண்டும் என்ற அடிப்படையில் தமது செவ்வியை
வழங்கியது மட்டுமன்றி, தமக்கு ஆதரவு தரும்படி முதன் முதலில் இந்தியப் பிரதமருக்கே கடிதம் எழுதியதாகவும் அதேபோன்று இலங்கை ஜனாதிபதி இது தொடர்பாக இந்தியத் தூதருடனேயே முதன்முதலாகப் பேசினார் என்றும் கூறி இந்தியா ஏதோ தமது பட்டியலில் முன்னுரிமையில் இருப்பதுபோன்ற ஒரு போலி முகத்தைக் காட்ட முயற்சித்துள்ளார்.

மறுபுறத்தில், ஜெனிவாவில் தமது கருத்தை வெளியிட்ட இந்திய தூதுவர், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்கள் சமத்துவமாகவும், கௌரவமாகவும் நடத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்பலுவல்கள் அமைச்சர் இது இந்தியாவினுடைய வழக்கமான புலம்பல் என்று கூறியுள்ளதையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் இப்பொழுது ஆட்சியிலிருக்கும் பௌத்த சிங்கள மேலாதிக்க அரசாங்கமானது பாரிய சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள், புதிய புதிய பௌத்த விகாரைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளோடு தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ள சூழலில், இலங்கை மண்ணில் தமிழ்
மக்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியா செயற்படவேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்.

யுத்தத்தில் பல இலட்சம் மக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். ஏறத்தாழ பதினைந்து இலட்சம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழலில், இலங்கை அரசாங்கத்தினுடைய இனவொழிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதானது
ஏற்புடையதாக அமையாது. மாறாக தமிழ் மக்களின் அழிவிற்கு ஆதரவளித்ததாகவே இருக்கும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இந்தியா எமது அயல்நாடு மாத்திரமல்ல, எமது மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துடனும் நெருக்கமான உறவுகொண்ட தொப்புள்கொடி உறவாகும். அதன்
பாதுகாப்பிற்குக் குந்தகமளிக்கும் எத்தகைய நடவடிக்கையையும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். அதே போன்று தமிழ் மக்களின் இன அழிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான முனைப்பான நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

இரவு நேர போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் தொடர் விசேட அறிவுறுத்தல்

east tamil

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்

east tamil

Leave a Comment