அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ள நிலையில் அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசியலில் இருந்தே விலகுவதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி தினகரனின் உறவினருமான வி.கே.சசிகலா நேற்று (3) அறிவித்தார்.
‘நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சசிகலாவின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை, தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் சாலையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சசிகலா முடிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் தனது முடிவை பரிசீலனை செய்து, அரசியலுக்கு மீண்டும் வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.