கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்யலாம் என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான காணியொன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று (4) அந்த காணியை தொடர்புடைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.
காகித நகர் கிராம சேவகர் பிரிவில் மஜ்மா நகரில் இந்த காணி அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட கொவிட் பொறுப்பாளர் பிரிகேடியர் பிரதீப் கமகே, ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகத்தினர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளன பிரதிநிதிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கல்குடா ஜனாஸா நலன்புரி சங்க பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் சென்று இடத்தினை பார்வையிட்டனர்.