உத்தரப்பிரதேசம் அலிகரில் பேச்சுத்திறனற்ற 14 வயது தலித் சிறுமி பலாத்காரத்திற்கு பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு பின்பும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் அலிகர் காவல்துறை திணறி வருகிறது.
அலிகர் பகுதியில் தனது பாட்டி வீட்டில் 10 வருடங்களாக வசித்து வருகிறார் பேச்சுத்திறனற்ற சிறுமி. இவரது தந்தை நகரில் ரிக்ஷா ஒட்டிப் பிழைக்க, தாயும் ஓட்டலில் பாத்திரம் தேய்க்கிறார். மற்ற இரண்டு சிறிய மகன்கள் பெற்றோருடன் வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது ஆடுகளுக்காக புல் வெட்ட சென்றார் அந்த சிறுமி. மலை இருட்டிய பிறகும் வீடு வராததால் தேடிய போது சுமார் 250 மீட்டர் தொலைவில் வயல்வெளியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிடைத்துள்ளது.
அரை நிர்வாண நிலையில் இருந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளில் காயம் இருந்துள்ளது. இதன் 100 மீட்டர் தூரத்தில் மது புட்டிகள் கிடந்திருந்தன.
இதனால், அப்பெண் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் அலிகர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான ஜி.முனிராஜ் ஐபிஎஸ் தன் படையுடன் நேரில் சென்றார்.
அவர்களை சம்பவ இடத்தில் நெருங்க விடாமல் கிராமத்தினர் கல் வீசியெறிந்து தடுத்துள்ளனர். இதில், ஒரு ஆய்வாளரும், 2 பெண் காவலர்களும் காயம் அடைந்தனர்.
சுமார் 4 மணி நேரம் நீடித்த பதட்டம், கிராமத்தினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின் தணிந்தது. இப்பிரச்சனையால் உடற்கூறு பரிசோதனை தாமதமாக மறுநாள் நடைபெற்றது.
இதில் பலாத்காரத்திற்கு முயற்சி செய்து முடியாமல் அச்சிறுமி அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், அப்படுகொலையின் குற்றவாளிகளை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அலிகரின் எஸ்எஸ்பியான முனிராஜ் கூறும்போது, ‘‘பலாத்காரம் செய்ய முடியாமல் சிறுமி அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். பலாத்காரத்தை உறுதிசெய்ய சிறுமியின் உடல்பாகங்கள் ஆக்ராவின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்கள் உறுதிசெய்யப்பட்ட பின் விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள்.’’ எனத் தெரிவித்தார்.
நேற்று அச்சிறுமியின் இறுதி சடங்குகள் அவரது குடும்பத்தினரால் செய்யப்பட்டது. பலியானவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் உ.பி. அரசு சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு சம்பவம் அலிகரின் அருகிலுள்ள ஹாத்ரஸில் நடைபெற்ற போது, பெரும் கலவரம் உருவாகி பலர் கைதும் செய்யப்பட்டனர். அதுபோல் நிகழாமல் பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கிராமத்தில் பதட்டம் நீடிக்கிறது.