யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்துகளை சேவையில் ஈடுபட அனுமதிப்பதில்லையென யாழ் மாநகரசபை முதல்வர் எடுத்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிராந்தியங்களிற்கான சேவையில் ஈடுபடும் பேருந்துகள், யாழ் ஆஸ்பத்திரி வீதியால் செல்ல முடியாதென யாழ் மாநகரசபை முதல்வர் அறிவித்திருந்தார். மார்ச் 1ஆம் திகதிக்கு பின்னர் அந்த வீதியால் பயணிக்கும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கையெடுப்பதாக அறிவித்திருந்தார்.
நேற்று (1) இது தொடர்பில், யாழ் பேருந்து நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டது. யாழ் முதல்வர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
தூர இடத்திற்கான சேவையை, யாழ் மாநகரசபை முதல்வர் சொல்வதை போல பண்ணையிலிருந்து ஆரம்பித்தால் என்ன என பொலிசாரும் கேள்வியெழுப்பினர். இந்த சம்பவங்களை செய்திகளாக பார்ப்பவர்களிற்கும் அந்த கேள்வியெழும்.
ஆனால், இதற்கு பின்னர் வேறும் பல சூட்சுமங்கள் உள்ளன.
இந்த சர்ச்சை, யாழ்ப்பாண முதல்வராக ஆர்னோல்ட் இருந்த போது உருவானது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், பேருந்து நிலையம் புனரமைக்கப்படும், கீழ்த்தளம் பேருந்து நிலையம், அதன் மேல் தளம் வாகன தரிப்பிடம், அதன் மேல் தளம் வர்த்தக நிலையம், மேம்பாலம் என்பன அமையுமென அவர் கூறியிருந்தார்.
கட்டுமான பணிகள் முடியும் வரை, புகையிரத நிலையத்திற்கு அண்மையில் பேருந்து நிலையம் இயங்கலாமென்றும் கூறினார்.
ஆனால், இ.போ.ச தொழிற்சங்கங்கள் அதில் எச்சரிக்கையாக இருந்தன. புனரமைக்கப்பட்ட பின்னர், இ.போ.ச மட்டுமே அதில் சேவையில் ஈடுபடுமா என கேட்டபோது, ஆனர்ல்ட் இல்லையென்றார்.
இ.போ.ச தொழிற்சங்கங்கள், தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபட மறுப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இ.போ.ச ஊழியர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருப்பினும், அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியையே அரசு வழங்கும். மிகுதி பகுதி அவர்கள் சபைக்கு ஈட்டும் வருமானத்தின் மூலமே வழங்கப்படும். கிட்டத்தட்ட அவர்களிடமும், தனியார் துறைக்குரிய எத்தனமிருந்தாலே முழுமையான சம்பளத்தை பெற முடியும்.
இரண்டாவது, மன்னார், வவுனியா பேருந்து நிலையங்களிலும் இதேவிதமான சம்பவம் நடந்தது.
சில அதிகாரிகளை வளைத்துப் போட்டோ என்னவோ, அந்த இரண்டு பேருந்து நிலையங்களிலும் தனியார்துறையின் கையே ஓங்கியுள்ளது. வவுனியா பேருந்து நிலையத்தில் தொடரும் மோதல்கள் இதற்கு சாட்சி.
யாழ்ப்பாணம் பண்ணைக்கு அருகில் திரையரங்கை தனியார் போக்குவரத்து துறை முதலாளிகள் கொள்வனவு செய்தனர். பின்னர், அங்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
வவுனியா, மன்னார் பேருந்து நிலையங்களில் நடந்ததை போலவே யாழ்ப்பாணத்திலும் சம்பவங்கள் நடந்தன. அந்த இரண்டு பேருந்து நிலையங்களிலும் இ.போ.சவை தனியார் துறையுடன் இணைக்க சில அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்தே, அதை நடத்தி முடித்தனர். இதேபோல, யாழ்ப்பாணத்தில், மாநகர முதல்வர் இப்பொழுது தலைகீழாக முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பண்ணையில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், தனியார் துறைக்கான பேருந்து நிலையமாகவே கட்டப்பட்டது. எனினும், இ.போ.ச இல்லாத இடத்தில், தனியார்துறை சேவையில் ஈடுபடுவதில்லை. தாம் சேவையில் ஈடுபடும் இடத்திற்கு, இ.போ.சவினரையும் சூட்சுமமாக அழைக்கும் உத்தியையே இம்முறையும் மேற்கொண்டுள்ளனர்.
இ.போ.ச இல்லாத இடத்தில் தனியார் துறையினர் ஏன் சேவையில் ஈடுபட முடியாமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை கண்டறிந்து, தனியார் துறையிலுள்ள குறைபாட்டை சரிசெய்ய முயல்வதே பொறுப்பான நடவடிக்கை.