மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (2) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதில், நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அதன்பிறகு, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021