க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த தனது மகளின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் தீவைத்த தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பிரதேசத்தில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீவைத்துள்ளார். இதில் மாணவியின் தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை மற்றும் ஆடை உட்பட வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹபராதுவ காவல்துறையினரால் நேற்று(01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பித்த நிலையில், மாணவியினது அடையாள அட்டை மற்றும் அனுமதி அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக காவல்துறையினரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதம் பரீட்சை மண்டப பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பரீட்சை எழுதுவதற்கு மாணவிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.