படபட பேச்சு, முகம் முழுவதும் சிரிப்பு என எப்போதும் நேர்மறை அணுகுமுறையில் இருப்பவர் தொகுப்பாளினி நட்சத்திரா. குறுந்திரைப்படம், நாடகங்கள், மாடலிங் என அடுத்தடுத்த தளங்களில் பயணிக்கும் நட்சத்திரா தன் வருங்காலக் கணவரை சமூக வலைதளம் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டுப் பெண்ணாக நட்சத்திராவைக் கொண்டாடும் பலரும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துகள் சொல்லி வருகிறார்கள்.
எல்லோரும் வாழ்த்துகள் சொல்றாங்க. மக்கள் நிறைய அன்பை எனக்குக் கொடுத்துட்டே இருக்காங்க. நான் ரொம்ப அதிர்ஷ்டம். இப்போ ராகவுக்கும் அதே அன்பு கிடைக்கப்போகுது. நன்றி மக்களே” என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொல்லிப் பேச ஆரம்பிக்கிறார்.
ராகவ்கிட்ட இருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கிட்டிருக்கேன். ஒரு வேலையைச் செய்தா நம்ம மனசுக்கு திருப்தியா இருக்குறமாதிரி செய்யணும்னு அடிக்கடி சொல்வார். நானும் அதே மாதிரியான எண்ணம் கொண்ட பெண். அதனால் ரெண்டு பேரும் படிக்கும் போதே நண்பர்கள் ஆகிட்டோம்.
கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல் நண்பர்களா இருந்திருக்கோம். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்குப் பக்கபலமா இருந்திருக்கார். வெளிநாட்டில் படிப்பு முடிச்சு இப்போ பிசினஸ் செய்ரார். தியேட்டர் கலைஞர் `தியேட்டர்காரன்’ என்ற பெயரில் நிறைய விழிப்புணர்வு நாடகங்கள், வீதி நாடகங்கள் பண்ணிட்டு இருக்கார். நான் நிறைய பேசிட்டே இருப்பேன். ராகவ் கொஞ்சம் அமைதி. ஆனா, ரொம்ப ஸ்மார்ட். மனுஷங்ககிட்ட ஏற்றத்தாழ்வுகள் பார்க்காம ஒவ்வொருத்தரையும் மரியாதையா நடத்தணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பார். என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நண்பன்” என்று ராகவ் புகழ்பாடும் நட்சத்திரா காதல் மலர்ந்த தருணம் பற்றி பேச ஆரம்பித்தார்.
ஒரு குறிப்பிட்ட வயசுல எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் `எப்போ கல்யாணம்’ என்ற கேள்வியை, நானும் எதிர்கொண்டேன். வாழ்க்கைத்துணை பத்தி யோசிக்க ஆரம்பிச்சப்போ, ராகவை விட என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாரும் இல்லைனு தோணுச்சு. அதே உணர்வும் ராகவுக்கும் இருக்க, ரெண்டு பேரும் காதலைப் பரிமாறிக்கிட்டோம்.
இரண்டு பேர் வீட்டிலும் நாங்க எப்போ திருமணத்தை பத்தி பேசுவோம்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இரண்டு குடும்பத்தில இருக்கிறவங்களுக்கும் எங்களை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசிலிருந்து எங்களைப் பார்க்குறதால இப்போ வீட்டுல சொல்லி சம்மதமும் வாங்கியாச்சு. இரண்டு குடும்பமும் பயங்கர சந்தோஷத்தில் இருக்காங்க. மக்கள் எல்லாருமே என்னை அவங்க வீட்டு பொண்ணாதான் பார்க்கிறாங்க. அதான் சமுக வலைத்தளத்தில் மூலமாக மக்கள்கிட்டயும் சொல்லிட்டேன்.