தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக புத்தம்புதிய காரை வாங்கிய சகோதரர்கள் இருவர், அந்த காரை தந்தைக்குப் பரிசளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) ஜெலெபுவில் உள்ள ஃபெல்டா பாசோவிலிருந்து செனவாங்கில் உள்ள தாமன் கோபெனாவில் உள்ள வீட்டுக்கு புதிய காரை ஓட்டிச் சென்றார் ஹவிட்ஸான் ஸைனல் (44).
அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு காரில் சென்றார் மற்றொரு சகோதரரான முகமது ஃபௌஸி ஸைனல் (39).
கேஎம்17 விரைவுச் சாலையில் ஜலான் கோலா பிலா சிம்பாங் பெர்டாங்கில் புதிய காரை ஓட்டிச் சென்ற ஹஃபிட்ஸான், காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்தார். சாலையில் வழுக்கிச் சென்ற கார், சாலையின் இடது புறம் இருந்த தடுப்பின் மீது மோதியது.
ஹஃபிட்ஸான் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னால் மற்றொரு காரை ஓட்டி வந்த அவரது சகோதரர் ஃபௌஸி ஸைனல், ஹஃபிட்ஸானின் நிலையைக் கண்டதும் அவருக்குக் வலிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் மயக்கமடைந்தார்.
காயமடைந்த சகோதரர்கள் இருவரும் உடனடியாக கோலா பிலாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உடலின் வெளிப்பகுதியில் காயங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஃபௌஸி உயிரிழந்துவிட்டார்.
விபத்தில் ஏற்பட்ட காயங்களால் தலையில் காயமடைந்த ஹஃபிட்ஸான் இரவு 8 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.