கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பிராந்தியத்தில் தொழுநோய் அபாயமுள்ள நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவான புதிய தொழுநோயாளர்களில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்க்பட்டுள்ளதாக உலக சுகாதார தெரிவித்துள்ளது. தீவிரமாக பரவும் இந்த நோய் குணப்படுத்தக்கூடியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் 15 வயதிற்குட்பட்ட 181 குழந்தைகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அந்த ஆண்டில் பதிவான தொழுநோயாளர்களில் 10.9% ஆகும். கடந்த 20 வருடங்களில் (2000 மற்றும் 2019) தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வீதம், பத்து சதவீதத்திற்கு அண்மையாக இருந்து வருகிறது.
புள்ளிவிவரங்களின் படி, மேற்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தை தொநோயாளிகள் உள்ளனர். அங்கு 81 நோயாளிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் 36 நோயாளிகளும், தெற்கு மாகாணத்தில் 17 நோயாளிகளும், வட மத்திய மாகாணத்தில் 7 நோயாளிகளும், ஊவா மாகாணத்தில் 6 நோயாளிகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டில் 1,749 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
முதல் அறிகுறி தோன்றிய ஆறு மாதங்களுக்குப் பிறகு சுமார் 455 நோயாளிகள் தங்களை சிகிச்சைக்காக தாமதமாக முன்வைத்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 224 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர், கம்பஹா மாவட்டத்தில் 213 தொழுநோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் 136 தொழுநோயாளர்கள் மற்றும் இரத்னபுரி மாவட்டத்தில் 16 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 தொழுநோயாளர்கள், அம்பாறையில் 50 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் இரு மாவட்டங்களிலும் பதிவான மிக உயர்ந்த அளவு இதுவாகும்.
இந்த இரண்டு மாவட்டங்களிலும், அடையாளம் காணப்படாத தொற்றாளர்களை கண்டறிய வேண்டிய தேவையுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு தொழுநோயாளர்களின் தொடர்பிலிருந்த 5,004 பேர் அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் 108 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்த நோய் அதிகரித்து வருவது சுகாதார அதிகாரிகளிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.