தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றதென வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து கட்சி லாபம் தேடி வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே அந்த அமைப்பு இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி அரசினை திருப்திப்படுத்த முயல்வதாகவும் அவர்களால் கடுமையாக சாடப்படுகின்றது.
தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தியும், அவர்களது உணர்வுகளை பயன்படுத்தியும் வருவதாகவும் கடுமையாக அவர்கள் சாடியுள்ளனர்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும், இலங்கை அரசை திருப்திப்படுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயல்வதாகவும் அவர்களால் சாடப்படுகின்றது.
போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுவதாகவும், சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை என்றும் தெரிவித்துள்ளனர்.
சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வர்த்தகர் ஒருவரின் விடுதியிலேயே இந்த அமைப்பின் சந்திப்பு நடந்து வருகிறது. அந்த வர்த்தகர், கட்சியை விட்டு விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளையை போல செயற்பட்டு வருவதாக இதுவரை விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடுதிப்பென இப்படியொரு அறிவிப்பை அந்த அமைப்பு வெளியிட்டமைக்கு, இரு தரப்பிற்குமிடையிலான உள்ளக முரண்பாடு காரணமாக இருக்கலாமென கருதப்படுகிறது.