இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சென்னையிலிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்குப் பின் பிற்பகலில் உடல் அடக்கம் நடக்கிறது.
டயாலிசிஸ் சிகிச்சை, நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராக 1953 இல் தன்னை இணைத்துக்கொண்ட தா.பாண்டியன், 68 ஆண்டுகள் அரசியலில் தான் மறையும்வரை செயல்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 3 முறையும், தேசிய கவுன்சில் உறுப்பினராக இறுதி வரையிலும் பணியாற்றியனார்.
அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளுநர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை முதல் 2 மணி வரை குடும்பத்தார் அஞ்சலி செலுத்த அவரது அண்ணா நகர் இல்லத்திலும், பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவரது உடல் பாலன் இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தா.பாண்டியன் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான மதுரை, உசிலம்பட்டியில் உள்ள கீழ் வெள்ளை மலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணை தோட்டத்தில் நடக்க உள்ளதால் நேற்றிரவு அவரது உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை அவரது உடல் கீழ் வெள்ளை மலைப்பட்டியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்குப் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் அவரது உடல் அடக்கம் நடக்கிறது.