வடகொரியாவிலிருந்து எட்டு ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கையால் தள்ளும் புகையிரத தள்ளுவண்டியில் வட கொரியாவை விட்டுச் வெளியேறினர். இவர்களில் ஒரு மூன்று வயது சிறுமியும் இருந்தார்.
வடகொரியாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, போக்குவரத்திற்கு வேறு மார்க்கங்களின்றி இந்த வழியில் ரஷ்ய தூதரக குழு தமது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளது.
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், பெண்கள் அமர்ந்துள்ள, சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ள ஒரு தள்ளுவண்டியை எல்லை புகையிரத பாலத்தின் குறுக்கே ரஷ்ய மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் சொரோகின் தள்ளுவதைக் காண முடிகிறது.
இவர்களது பயணம் வடகொரியாவின் பியோங்யாங்கிலிருந்து 32 மணி நேர புகையிரத பயணத்துடன் தொடங்கியது. பின்னர் இரண்டு மணி நேரம் பேருந்தில் பயணித்து எல்லையை அடைந்தனர். தங்கள் தாயகத்தை நோக்கி செல்வதால் மகிழ்ச்சியில் இருந்த குழு மகிழ்ச்சியுடன் கை அசைப்பதையும் காண முடிந்தது.
“தாயகம் செல்வதற்கான இந்த பயணம் நீண்ட மற்றும் கடினமான பயணமாக இருந்தது” என்று வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறிய அமைச்சு, அந்த தள்ளுவண்டியில் குழு எப்படி தங்கள் பயணத்தை மேற்கொண்டது என்பதையும் விவரித்தது.
“இறுதியாக, பயணத்தின் மிக முக்கியமான பகுதி – ரஷ்ய பக்கத்திற்கு கால்நடையாக நடந்து செல்வது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டது.
குழுவில் இருந்த ஒரே ஆணான சொரோகின், தள்ளுவண்டியின் எஞ்சினாக செயல்பட்டார். அவர் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் அந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய எல்லைக்குள் வந்தவுடன், அவர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் அவர்களை பேருந்து மூலம் விளாடிவோஸ்டாக் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.