தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஏப்ரல் 6ஆம் திகதியே கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளதால் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் நேற்று (26) மாலை அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது போல், காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் திகதியே இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் கடந்த ஓகஸ்ட்டில் காலமானார். இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
கன்னியாகுமரி இடைத்தேர்தலை காங்கிரஸும், பாஜகவும் ஆர்வமாக எதிர்நோக்கியிருந்தன. இழந்த தொகுதியை பிடிக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜகவின் நயினார் நாகேந்திரனும் கன்னியாகுமரி தொகுதியில் சீட் வாங்க முயற்சித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை நிறுத்தி அனுதாப வாக்குகளைப் பெற்று தொகுதியை தக்கவைக்க காங்கிரஸும் முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும், கன்னியாகுமரி காங்கிரஸில் ஒரு சிலரோ சீனியர்கள் இருக்கும்போது விஜய்வசந்தை முன்னிலைப்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு கோஷங்கள் எழுந்துள்ளன.
தற்போது மக்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி தேர்தல் களம் கூடுதலாக பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.