நைஜீரியாவின் சம்ஃபாரா மாநிலத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 317 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குறிப்பில் “நைஜீரியாவில் பாடசாலை மாணவிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். டிசம்பர் மாதத்திலிருந்து இது மூன்றாவது கடத்தல் சம்பவம். இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை. அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும். கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ஃபாரா மாகாணத்தின் உயர்நிலை பாடசாலையைச் சேர்ந்த 317 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பாடசாலையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று, 27 மாணவர்கள் உள்ளிட்ட 42 பேரை கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.
எனினும், கடத்திச் செல்லப்பட்ட 42 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
“கடத்தப்பட்ட மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நைஜர் அரசால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்” என்று அந்த மாநில ஆளுனர் அபூபக்கர் சானி பெல்லோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.
யார் இந்த போகோ ஹராம் தீவிரவாதிகள்?
2002 இல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.
போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.