அமெரிக்க ஜனாதிபதியான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன்.
சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமையன்று அமெரிக்க இராணுவம் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பல நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. வாகனங்களும் தாக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அவர் விடுத்த முதல் தாக்குதல் உத்தரவு இதுவாகும்.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஹிஸ்புல்லா, சயித் ஷுஹடா ஆகிய தீவிரவாத அமைப்புகள் தாக்கப்பட்டன என்று அமெரிக்க இராணூவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் பலியானவர்கள் விவரத்தை அமெரிக்க இராணுவம் வெளியிடவில்லை. எனினும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 17 பேர் பலியானதாக சிரியாவில் இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.