யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பற்றி ஆராய இந்திய நிபுணர்கள் குழு மார்ச் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கு இந்திய அரசு நிதி வழங்கவுள்ளது.
இந்த அபிவிருத்திப் பணிகளின் போது, பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை அகலப்படுத்துவது உட்பட ஏழு முக்கிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் நாட்டின் பிற விமான நிலையங்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்தாலும், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்னும் செயல்படவில்லை.
புதிய அரசுக்கு பலாலி விமான நிலையத்தை மீள இயக்கும் உத்தேசம் இருக்கவில்லையென முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான நிதியை இந்தியா வழங்க தயாராக இருந்த போதும், இலங்கை அதில் அக்கறை காட்டவில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், அண்மைக்காலத்தில் இந்தியா மேற்கொண்ட சில அழுத்தங்கள் காரணமாக, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.