Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழர்களின் சம உரிமையை அங்கீகரிப்பதை தவிர இலங்கைக்கு வேறு தெரிவுகளில்லை; ஆனால் ஆணையாளரின் அறிக்கை கவலை: ஜெனீவாவில் இந்தியா!

இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கை தமிழர்களின் கௌரவம், சம உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. இலங்கைக்கு இதைத்தவிர வேறு தெரிவுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த பின்னர் மனித உரிமைகள் தொடர்பான 7 தீர்மானங்களை இந்த பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.

அதே போன்று இலங்கையுடன் அதன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலக நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

அதாவது இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது.

இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம்.

மோதலின் பின்னரான 12 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து உயர் ஸ்தானிகரின் மதிப்பீடு கவலையளிக்கிறது.

இது குறித்து இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டையும் மதிப்பீடு செய்வதிலேயே இந்த பிரச்சினைக்கு நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் காண முடியும். இதற்கான உறுதிப்பாட்டின் மூலம் நாம் வழிநடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!