புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். முதலாவதாக, காரைக்கால் மருத்துவக் கல்லூரி புதிய வளாகக் கட்டிடம், சாகர்மாலா திட்டம் ஆகியவற்றுக்கான அடித்தளம் அமைக்கும் நிகழ்ச்சி, காணொலி வாயிலாக ஜிப்மரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசுகையில்,
‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
இதன்பின்னர் பேசுகையில், “கற்றலும் கல்வியும்தான் விலை மதிப்பில்லாதது. மற்றவை எல்லாம் நிலையற்றவை. ஆரோக்கியத்தின் தரத்தை மேம்படுத்த நமக்குத் தரமான மருத்துவப் பணியாளர்கள் தேவை. அதை நோக்கிய ஒரு அடிதான் காரைக்கால் மருத்துவக் கல்லூரி புதிய வளாகக் கட்டிடத்திற்கான முதல் திட்டம். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைய உள்ள இந்த வளாகம், மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் பயிற்றுவிப்பதற்கான நவீன வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
கடற்கரைதான் புதுவையின் உயிர்நாடி. மீன்பிடித் தொழில், துறைமுகம் மற்றும் கடல் போக்குவரத்தை உள்ளடக்கிய நீலப் பொருளாதாரத்தில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி கொட்டிக் கிடக்கும் முத்துகளை அள்ளிச்செல்லும் அருமை வாய்ப்பாக சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதுச்சேரி துறைமுக மேம்பாட்டு திட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததில் பெருமை கொள்கிறேன்” என்றார்.