இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று (24) பரிசீலிக்கவுள்ளது.
இலங்கையில் போரின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், பரிந்துரைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறைகளை செயல்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பிடுமாறு மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டுக்கொண்டது.
40/1 தீர்மானத்தில், 30/1 ஐ அமல்படுத்துவது பற்றிய ஒரு விரிவான அறிக்கையை 46 வது அமர்வில் முன்வைக்க மனித உரிமைகள் பேரவையை கேட்டுக் கொண்டது.
அதன்படி, அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்படும், அதைத் தொடர்ந்து அதையொட்டிய உரையாடலும் நடைபெறும்.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் தனது அறிக்கையில், இலங்கையின் போக்குகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார். புதிய அரசின் பதவியேற்பின் பின் மனித உரிமை நிலவரத்தில் ஏற்பட்டுள்ள அபாயம், சிறுபான்மையினர் மீதான எதிர்ப்புணர்வு பற்றி விலாவாரியாக அறிக்கையிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் குறிக்கிறது.
இந்த நிலையில், இலங்கையில் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இணை அனுசரணை நாடுகள் 46 வது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன.
கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மொண்டினீக்ரோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாடுகள் இந்த பிரேரணையை சமர்ப்பிக்கின்றன.