எதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இடம்பெற இருப்பதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் படி ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகிய இரு வீதிகளும் குறிப்பிட்ட தினங்களில் ஒருவழிப் பாதைப் பயணத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆடியாபாதம் வீதியில், திருநெல்வேலிச் சந்தியில் இருந்து பிறவுண் வீதிச் சந்திப் பகுதி வரை செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் இருந்து பரமேஸ்வராச் சந்தி நோக்கிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
இதே நேரம், ஆடியபாதம் வீதி, வளாக ஒழுங்கை, இராமநாதன் வீதி, புகையிரத நிலைய ஒழுங்கை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தரித்து நிற்பதற்குத் தடைசெய்யப்பட்டிருப்பதுடன், பட்டமளிப்பு விழாவுக்கு வருபவர்களின் வாகனங்களை யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி மைதானத்தினுள் நிறுத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.