அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நாய் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் முற்றி, நாயின் உரிமையாளருக்கும் அயல் வீட்டுடன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
ஆலையடிவேம்பு பஸ்தியான் வீதியிலுள்ள குறித்த வீடு ஒன்றில் நாய்வளர்த்து வருகின்றனர். இந்த நாய் அயல்வீட்டின் முன்பக்க வாசல் பகுதியில் மலம் கழித்து வந்துள்ளது இது தொடர்பாக நாய் உரிமையாளரிடம் அயல் வீட்டுக்காரர் தெரிவித்து வந்ததையடுத்து இரு வீட்டின் உரிமையாளர்களுக்கிடையே நீண்காலமாக சர்ச்சை இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் குறித்த நாய் வழமைபோல அயல்வீட்டின் முன்பகுதியில் மலம் கழித்துள்ளதையடுத்து அயல் வீட்டின் உரிமையாளர் நாய் மலம்கழித்த மலத்தை செப்பின் பையில் அள்ளி எடுத்து நாயின் உரிமையாளரின் வீட்டின்முன் பகுதியில் வீசியதையடுத்து நாயின் உரிமையாளாரின் குடும்பத்தினருக்கு அயல் வீட்டின் குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையில் முடிந்தது .
இந்த சண்டையில் நாயின் உரிமையாளரின் குடும்பத்தினர் அயல் வீட்டின் உரிமையாளர் மீது தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.