பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் பொத்துவில் மற்றும் கல்முனை பொலிஸார் நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுச் சென்றனர்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி பேரணியில் கலந்து கொண்டதற்காக கல்முனை பொலீசாரும், பொத்துவில் பொலீசாரும் விசாரணைகளை நடாத்தினர்.
21.02.2021 அன்று காலைவேளை வாழைச்சேனை விபுலானந்தர் வீதியிலுள்ள எனது இல்லத்திற்கு வருகைதந்த பொத்துவில் பொலீசார் நான் தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்டதன் நிமித்தம் சிலமணிநேரம் அங்கிருந்ததோடு, பின்னர் அன்றையதினம் பிற்பகல் வேளையில் நான் செல்லம் தியேட்டர் மோகன் அவர்கள் நடாத்திய தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்டபோது, குறித்த நிகழ்வு நடைபெற்ற செல்லம் தியேட்டருக்கு வருகைதந்து அங்கு என்னை ஒரு மணிநேரம் விசாரணைக்குட்படுத்தினர்.
பொத்துவில் பொலீசார் மூவர் அந்த விசாரணையை மேற்கொண்டனர். நீதிமன்றக் கட்டளையினை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டதாக விசாரணையானது அமைந்திருந்தது. அவ்விசாரணை நிறைவடைவதற்கு முன்பே செல்லம் தியேட்டருக்கு கல்முனை பொலீசாரும் வருகைதந்து நீதிமன்றக்கட்டளை இருக்கும்போது கல்முனையில் குறித்த பேரணியில் கலந்துகொண்டதாக அவர்களும் என்னை விசாரணைக்குட்படுத்தினர். நான் வீட்டில் இல்லாத காரணத்தினாலும், தாய்மொழிதின நிகழ்வில் கலந்துகொண்ட செல்லம் தியேட்டரில் மோகன் அவர்களால் ஒழுங்குசெய்து தரப்பட்ட தனிமண்டபத்திலேயே அனைத்து விசாரணைகளையும் பொலீசார் மேற்கொண்டனர் என்று தெரிவித்தார்.