அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – 3பேர் பலி
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் துப்பாக்கி வாங்குவதற்காக வந்திருந்தனர். விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் அவர்களுக்கு துப்பாக்கிகளை காண்பித்துக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனை நிலையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய துப்பாக்கியால் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
துப்பாக்கி விற்பனை நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன ? என்பது உடனடியாக தெரியாத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.