யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.
கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண் தங்க நகைகள் மற்றும் 2 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டது.
அண்மையில் யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள பூட்டியிருந்த வீட்டை உடைத்து இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டுப் போயிருந்தன.
அத்துடன் அண்மையில் இரவு வேளை அரியாலை துண்டிலில் உள்ள கடைகள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் திருட்டுப் போயிருந்தன.
சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
அவை தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தடயங்களின் அடிப்படையில் பாசையூர், குருநகர் மற்றும் பொஸ்கோ பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் 23 தொடக்கம் 40 வயது வரையிலான மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் மூவரிடமும் நகை மற்றும் பொருள்களை வாங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நாளை அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.