செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறன.
பெர்சவரன்ஸ் ரோவர் ஜி.எம்.டி நேரப்படி சரியாக நேற்று (பிப்.,18, வியாழக்கிழமை) இரவு 20.55 செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து புதிய ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பியுள்ளது.
இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கிரகத்தின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியையடுத்து வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நாசா புரொபல்சன் லேபரேட்டரி வழிநடத்தும் குழு தலைவராக உள்ள ஸ்வாதி மோகன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஸ்வாதிக்கு ஒரு வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஸ்வாதி தனது இளமை பருவம் முதல் வடக்கு வெர்ஜினியா – வாஷிங்டனில் கழித்துள்ளார். ஸ்வாதிக்கு 9 வயதாக இருக்கும்போது ஸ்டார் ட்ரிக் விண்வெளி தொடரை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டு விண்வெளி துறையில் டாக்டர் பட்டம் பெற்று தற்போது நாசாவின் முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.