27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

அப்பாவை இழந்தது கடினமான தருணம்; குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்: ராகுல் காந்தி!

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு இன்று (17) மதியம் வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

“பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம்.

நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து அவை சுயமாகச் செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது நான் திணிக்கமாட்டேன். தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கிறேன். பல்வேறு சிந்தனைகளைக் கொண்டதுதான் இந்தியா. ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை.

பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது தாங்களாகவே ஆண்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும். பெண்களுக்குப் பெண்களால்தான் பாதுகாப்பு அளிக்க முடியும்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற சிந்தனையை சமுதாயத்தில் உருவாக்கும்போதுதான் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும்.

கரோனா காலகட்டத்தில் 5 சதவீத தொழிலதிபர்களுக்கு ரூ.1.57 லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்கியது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லப் பேருந்து வசதியைக்கூட செய்து தரவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிகப்பெரிய கடினமான தருணம். அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது.

இந்தியாவை 4 தொழில் நிறுவனங்கள் மட்டுமே வழிநடத்தும்போது பொதுமக்கள் எப்படித் தொழில் செய்ய முடியும்? விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாகக் கருதுகிறேன். இவை மூலம்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும் இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும். ஆனால், இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால்தான் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க்கிறோம்”.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

அண்ணா என்று அழைக்கலாமா?

கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது மாணவிகள் ஒவ்வொருவராக ராகுல் காந்தியிடம் ‘சார்’ என்று அழைத்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரும் பதில் அளித்தபடி இருந்தார். ‘சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழைக்கலாம்’ என்றார்.

அப்போது, மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ‘உங்களை அண்ணா என்று அழைக்கலாமா?’ என்று கேட்டார். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து, கலந்துரையாடலில் கேள்வி கேட்ட மாணவிகள் சிலர் ‘அண்ணா’ என்று ராகுல் காந்தியை அழைத்து தங்களின் கேள்வியைக் கேட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment