நடிகை தியா மிர்சாவுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர் தியா மிர்சா. இந்தியில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட புகைப்படங்களால் இணையத்தில் பிரபலமானார்.
ஜீ5, அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியான காஃபிர், மைண்ட் தி மல்ஹோத்ராஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார் தியா மிர்சா. தற்போது நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தியா நடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான வைபவ் ரேகி என்பவருடன் இன்று மும்பையில் தியாவுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இத்திருமண நிகழ்வில் கரோனா விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக வைபவ் ரேகியைக் காதலித்து வந்த தியா மிர்சா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது திருமணம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
2019ஆம் ஆண்டு தியா மிர்சா தனது முன்னாள் கணவர் சாஹில் சங்காவுடனான 11 வருட மணவாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.