ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகளின் சார்பில் தீர்மானங்களை சமர்ப்பிக்கும் முயற்சியாக இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
மாலை 6 மணிக்க சந்திப்பு இடம்பெறும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், க.சர்வேஸ்வரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தமிழ் பக்கம் அறிகிறது.
அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ, ஜெஹான் பெரேரா போன்ற பலரும் கலந்து கொள்கிறார்கள்.
சில தினங்களின் முன்னர் வவுனியாவில் நடந்த கலந்துரையாடலில், அரச சார்பற்ற நிறுவனத்தினரை கூட்டத்தில் பங்கேற்க வைப்பதில் தமிழ் மக்கள் கூட்டணி அதிருப்தி தெரிவித்தது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கும் சிங்கள தரப்பினர் பலர் இருக்கிறார்கள், அவர்களை அழையுங்கள் என வலியுறுத்தியது.
எனினும், எம்.ஏ.சுமந்திரன் அதற்கு வித்தியாசமான விளக்கம் வழங்கியிருந்தார்.
“கஜேந்திரகுமாரும், விக்னேஸ்வரன் ஐயாவும் ஒரே கூட்டத்தில் கலந்து கொள்ள, நேருக்கு நேர் முகத்தை பார்த்து பேச இணங்காமல் இருக்கிறார்கள். அவர்களை சந்திக்க வைக்கும் போது, பொதுவான- அவர்களிற்கு அறிமுகமான வெளித்தரப்பினர் கலந்து கொள்வது நல்லதென்ற அடிப்படையில் அவர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது“ என விளக்கமளித்தார்.