உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்ததையடுத்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 100 முதல் 200 பேர் வரையில் மாயமாகினர். அவர்களில் சுமார் 150 பேர் வரையில் உயிரிழந்திருக்கக் கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை, இந்திய இராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய விமான படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகொப்டர் என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.
தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் பொலிஸார் மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், 8ஆம் திகதி இரவு 8 மணிவரையில் 26 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதுடன், 171 பேரை இன்னும் காணவில்லை என உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர்களில் 35 பேர் சுரங்க பாதையில் இருக்க கூடும் என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.