கிழக்கு லடாக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்ய சபாவில் இராணுவ துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியாவின் வடக்கு எல்லையில் நிலவும் அச்சுறுத்தலை சமாளிக்க அங்குள்ள இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இராணுவத்தினர் முகாமிட்டுள்ள எல்லைப் பகுதியில் தற்போதுள்ள சூழலை எதிர்கொள்ளவும் தட்ப வெப்ப நிலையை சமாளிக்கவும் தேவையான சாதனங்கள் வாங்கப்படுகின்றன. அவை இராணுவத்தினரின் தாக்குதல் திறனை அதிகரிக்க உதவும்.
சீன எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள நம் இராணுவத்தினரின் குடும்பத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தலைமையகத்திற்கு மூன்று ஆண்டுகளாக எந்த முறைப்பாடும் வரவில்லை.
பிராந்திய அளவில் வரும் முறைப்பாடுகளுக்கு அந்தந்த மட்டங்களில் தீர்வு காணப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.