மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும்.
நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம்.
மாணவர்கள் சிறந்த முறையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மன உளைச்சலை களைய வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு எழுதும் புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது என தேசிய தேர்வுகள் முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் நீட் தேர்வுக்கான திகதியை தேசிய தேர்வுகள் முகமை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும். பல மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இந்த வருடம் 10 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.