26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 10வது தேசிய மாநாடு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்று வருகிறது.

நிகழ்வின் ஆரம்பத்தில், புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்ட தீர்மானங்களை அறிவித்தார்.

பொதுச்சபை கூட்ட தீர்மானங்கள் வருமாறு-

2022 ஒகஸ்ட் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இணுவிலில் ‘சுந்தரம் அரங்கு’ இடம்பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 10 வது பொதுச்சபைக்கூட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட தீர்மானங்களாவன,
கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு அழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்த தேசிய இன முரண்பாட்டுக்கான தீர்வு குறித்த அணுகுமுறையில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பின்வரும் விடயங்களில் உறுதிபூணுகிறது.

1. இலங்கையில் தமிழ் மக்களினது நியாயமானதும் அடிப்படையானதுமான அரசியல், சமூக,பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை, ஒரு தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சமஷ்டி அமைப்பு முறையிலான அரசியலமைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளுதல்.

2 தமிழ் மக்களின் நலன்களுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், இந்த நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் எனும் அடிப்படையில், தமிழினத்தின் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற, முஸ்லீம் அரசியல் சக்திகளுடனும் மலையக அரசியல் சக்திகளுடனும் இணைந்து மற்றும் எமது அபிலாசைகளை ஏற்று கொள்கின்ற சிங்கள முற்போக்கு சத்திகளின் ஆதரவுடனும், பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்படுதல்.

3. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் காணப்படுகின்ற சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசியல் கூட்டு முன்னணி ஒன்றின் இருப்பிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்தல். அத்தகையதொரு கூட்டு முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து இயங்கிவரும் இதர தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.

4. தென்னிலங்கை சிங்கள மக்களுடனான சமூக உடன்படிக்கையை உருவாக்கக்கூடிய புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும், சாதகமான முறையில் பங்குகொள்ளும் அதேவேளையில், தற்போதைய அரசியலமைப்பில் சட்டமாக உள்ள 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக செயற்படுவதுடன், அதனைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுதல்.

5. நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரச் சீரழிவுக்குப் பின்னரான பிராந்திய சர்வதேச உறவுச் சூழலில் சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் மீது குவிந்திருக்கும் நிலைமையை சாதகமாகக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை பெறுவதற்காக முயற்சித்தல்.

6. இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட, மனித குலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்த பொறுப்புக்கூறல்கள் சம்பந்தமாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க தமிழ் மக்களின் நீண்டகால நலன்களில் அக்கறை கொண்டுள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுதல்.

7. உயிரிழந்த தமது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை தாம் விரும்பிய நாளில் விரும்பிய இடத்தில் அஞ்சலி செய்யும் மரபை எவ்வித இடையூறுகளோ அச்சுறுத்தல்களோ இன்றி தொடர்ச்சியாக கடைப்பிடிக்க தேவையான சூழலை ஏற்படுத்துதல்

8. அபிவிருத்தி எனும் போர்வையில், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்குடன், தமிழர் தாயகத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களாகவுள்ள மகாவலி அதிகாரசபை, தொல்லியல் திணைக்களம், வனத் திணைக்களம், மற்றும்வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.

9. தேசிய இன விடுதலைப் போரின் பெயரால் சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்கி அவர்களை விடுதலை செய்யும் வகையிலான அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தல்.

10 .காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடைய நீதி கோரிய போராட்டத்திற்கான ஆக்கபூர்வமான தீர்வினை பெற்றுக்கொள்ளஇ சம்பந்தப்பட்ட சகல தரப்புகள் மீதும் அழுத்தங்கள் வழங்குதல் மற்றும் சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

11. அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை நிராகரிப்பதோடு, படைத்தரப்புகளுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கருத்து வெளிப்பாடுகளையும் முடக்க முற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

12. அனைத்து இயக்கங்களினதும் முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மீண்டும் சமூகத்தில் கௌரவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் ஒன்றித்து வாழக்கூடிய வகையில், அவர்களது சமூக பொருளாதார வாழ்வை வளப்படுத்துவதற்கான உதவிகளை அரச நிறுவனங்களிடமிருந்தும், புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்தும், சாத்தியமான அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

13. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நிர்வாக அலகுகளில் அவர்களது இன விகிதாசாரத்தை குறைத்து, சமூகப் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும் வகையிலான எல்லை மாற்றங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

14. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில், அதிகாரப்பகிர்வுத் தத்துவத்திற்கு முரண்பட்ட வகையிலான மத்திய அரசுத் தலையீடுகளை தடுக்கவும், தொடர்ச்சியாக பாதிப்படைந்து வரும் வறிய, பின் தங்கிய, தொலைதூரக் கிராமங்களில் கல்வி வளர்ச்சியையும் சுகாதார மேம்பாட்டினையும் போக்குவரத்து வசதி வாய்ப்புகளையும் உறுதிபடுத்தக்கூடிய நிர்வாக முறை மாற்றங்களை சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

15 தேசிய ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் முன்னெடுக்கக் கூடிய தொழிற்துறைகள் மற்றும் தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட்டு அதிக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

16 வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளங்களை அழித்து அனைத்துக் காலத்துக்குமான பொருளாதார அழிவை ஏற்படுத்துகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் விடயத்தில் என்றென்றும் எமது ஆதரவு சக்தியாகவும் மிக நெருங்கிய உறவாகவும் விளங்கும் தமிழக மக்களுடனான நீண்டகால உறவுகள் பாதிக்கப்படாத வகையில் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமான வழிகளில் அரசுகள் மட்டத்திலும் மீனவ சமூகங்கள் மட்டத்திலும் இயன்றளவு விரைவாக செயற்படுத்தல்.

17. விவசாயிகளின் ஒத்துழைப்புடன், போதிய கால அவகாசத்துடன் இரசாயணப் பசளைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு நஞ்சற்ற விவசாய உற்பத்திகள் ஊக்கப்படுத்தல் மற்றும் எத்தகைய பொருளாதார நெருக்கடியிலும் உணவுப் பஞ்சத்திலிருந்து விடுபட்டு வாழும் வகையில் தற்சார்புப் பொருளாதார அம்சங்களை ஊக்குவித்து உற்பத்திகளை பெருக்க கிராம அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தல் அல்லது ஆதரவை வழங்குதல்

18. வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மேய்ச்சல் தரைகளையும் பாதுகாத்துக் கொள்ளுதல் மற்றும் வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களில் புதிய மேச்சல் தரைகளை உருவாக்கி விலங்கு வேளான்மையை பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல்

19. சுதேச பொருளாதார மூலங்களாக திகழும் பனை, தென்னை வளங்களைப் பாதுகாத்தல் ஆய்வுக்குட்படுத்தல்இ மேம்படுத்தல் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான செயற்திட்டங்களை மேம்படுத்தல்.

20. சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலமான மின்சார உற்பத்தி முறையினை ஊக்குவிக்கவும் பயன்படுத்தவும் கூடிய அரச தனியார் செயற்திட்டங்களுக்கு பொதுமக்களின் பொருளாதார, சமூக நலன்களுக்கு கேடு ஏற்படாத வகையில் ஆதரவு வழங்குதல்.

21. எமது சந்ததிகளின் எதிர்காலத்துக்கு பிரதான எதிரியாக மாறிவரும் பொலித்தீனின் பாவனை அற்ற சமூகமாக எம்மை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு நிலத்தடி நீர் மாசடையும் காரணிகளை இனம் கண்டு அவற்றிற்கு முற்றாக தடை விதிக்கும் பொறிமுறைகளையும் நிர்வாக முறைமைகளையும் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment