இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த ஆண்டு ரி20 போட்டிகளாக நடக்கவுள்ளது. ஓகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக தொடரை வேறு இடத்தில் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. தற்போது தொடர் நடைபெறும் இடம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பைத் தொடரை நடத்துவது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. நேற்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதேபோல் தற்போது பாகிஸ்தான் அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. என்றாலும், கடந்த பதினைந்து நாட்களில் ஆட்சியாளர்களிற்கு எதிராக நாடு முழுவதும் நடந்த தொடர் போராட்டங்களால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
இதனாலேயே, ஆசிய கோப்பை தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை கிரிக்கெட் சபை, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து தொடரை வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் சம்மதம் தெரிவித்துள்ளது.