டெல்லியில் கணவனின் வற்புறுத்தலால் 14 முறை கருக்கலைப்பு செய்த பெண் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜெய்த்பூர் குடியிருப்பில் 33 வயதான பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்கு தகவல் சென்றது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, தூக்குபோட்டு இறந்த பெண்ணின்உடலை கைப்பற்றிய போலீசார், அப்பெண் தூக்குபோட பயன்படுத்திய கயிறு, ஸ்டூல் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடத்தபட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்கொலை செய்துகொண்ட பெண் பீகாரில் உள்ள முசாபர்பூரை சேர்ந்தவர். இவர் பெற்றோரை பிரிந்து ஜெய்த்பூரில் வசித்து வந்துள்ளார்.
மேலும், அந்த பெண் நொய்டாவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வரும் வாலிபருடன் திருமணமாகாமல் கடந்த 8 ஆண்டுகளாக ‘லிவிங் டு கெதர்’ முறையில் வசித்து வந்துள்ளார். கணவன், மனைவியாக இருவரும் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் அந்த பெண் 14 முறை கர்ப்பமாகியுள்ளார்.
ஒவ்வொரு முறையும், சில நாட்கள் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம், அதுவரை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என பெண்ணின் காதலன் கூறி கருக்கலைப்பு செய்து வந்துள்ளார்.
ஆனால், சில நாட்கள் முன்பு அந்த காதலன் அப்பெண்ணை ஏமாற்றுவிட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது .திருமணம் செய்துகொள்ளாமல் 8 ஆண்டுகளாக கூட வாழ்ந்த காதலனால் 14 முறை கர்ப்பமாகி பின்னர் அதே காதலன் கழட்டிவிட்டு சென்றதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண் கடிதம் எழுதிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணின் காதலன் மீது வழக்கு போட்டுள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர்.