25.9 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

கொலையில் முடிந்த முகநூல் பழக்கம்

முகநூல் மூலம் பெண்ணிடம் பழகிவந்த நபர், பண விவகாரத்தில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் மாயமானவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி, கும்மிடிப்பூண்டியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து வேலைக்குச் சென்ற மாரிமுத்து அதன் பிறகு அறைக்குத் திரும்பவில்லை. அவர் குறித்துத் தகவல் எதுவும் தெரியாததால், பதற்றமடைந்த மாரிமுத்துவின் தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டிக்கு நேரில் சென்று மகன் மாயமானது குறித்து அறையில் உடன் தங்கியிருந்தவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், மகன் மாரிமுத்து மாயமானது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மாரிமுத்துவைத் தேடிவந்தனர்.

தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் மாரிமுத்துவைத் தேடியும் அவர் கிடைக்காததால் , சந்தேகமடைந்த போலீஸார் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். இதற்காக மாரிமுத்துவின் செல்போன் எண் ஆய்வுசெய்யப்பட்டது. அவர், காணமல்போன தேதியில் யார், யாரைத் தொடர்புகொண்டார், அவருடன் பேசியவர்கள் யார், எங்கு சென்றார் என ஆய்வு செய்ததில் மாரிமுத்துவின் செல்போன் எண் திருநெல்வேலி, சங்கரன்கோவில், ராஜபாளையம் என சிக்னல் இடங்களை மாறி மாறிக் காட்டியிருக்கிறது.

இதையடுத்து, மாரிமுத்துவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்புகொண்ட ஒருசிலரின்‌ எண்களை சந்தேகத்தின்பேரில் எடுத்துக்கொண்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸார், தென்மாவட்டத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். இதில், சந்தேகப்படும்படியான செல்போன் எண் மணிமுத்தாறு 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் வில்வதுரை என்பவருடையது எனக் கண்டுபிடித்தனர். இதையடுத்து வில்வதுரையிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து மாரிமுத்துவைக் கொலைசெய்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவர் அளித்த தகவலின்படி கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ராகுல்ராஜ் என்ற இசக்கிதுரை, ரவிக்குமார், அவரின் மனைவி இளவரசி ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக போலீஸாரிடம் பேசுகையில், “மாரிமுத்துவின்‌ உறவினர் ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கோவில்பட்டியைச் சேர்ந்த ராகினி என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்திருக்கிறார். பிறகு அவரே, அந்தப் பெண்ணை மாரிமுத்துவுக்கும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மாரிமுத்துவும், ஃபேஸ்புக்கில் அந்தப் பெண்ணிடம் பழகிவந்திருக்கிறார். நாளடைவில் அந்தப் பெண், மாரிமுத்துவைக் காதலித்ததாகத் தெரிகிறது. இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி மாரிமுத்துவிடமிருந்து ரூ.5 லட்சத்தை அந்தப் பெண் கடனாக வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் பெண், மாரிமுத்துவைக் காதலிக்கும் விவரம் மாரிமுத்துவின் உறவினருக்குத் தெரியவரவும், அந்தப் பெண்ணை தான் ஏற்கெனவே காதலிப்பதாகவும், அதனால் அவரை தனக்கு விட்டுக்கொடுக்கும்படியும் மாரிமுத்துவிடம் அவர் கேட்டிருக்கிறார். இதன்பின் அந்தப் பெண்ணுடனான பழக்கத்தைக் குறைத்துக்கொண்ட மாரிமுத்து, தான் கடனாகக் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், இதோ தருகிறேன், அதோ தருகிறேன் எனச் சொல்லி மாரிமுத்துவை ஏமாற்றிவந்ததாகக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், மாரிமுத்துவின் டார்ச்சர் குறித்து, தன்னுடன் ஃபேஸ்புக்கில் பழகிவந்த மற்ற நண்பர்களான 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் வில்வதுரை, ராகுல்ராஜ் என்ற இசக்கிராஜ், ரவிக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, இவர்கள் மூவரும் சேர்ந்து மாரிமுத்துவைத் தொடர்புகொண்டு கடனை நாங்கள் திருப்பித் தருகிறோம். திருநெல்வேலிக்கு வந்து வாங்கிக்கொள் எனக் கூறியுள்ளனர். எனவே, கடந்த 28-ந்தேதி கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்பட்ட மாரிமுத்து திருநெல்வேலிக்கு வந்து வில்வதுரையைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தொடர்ந்து அவர்களுடன் ராகுல் ராஜ் என்ற இசக்கிராஜ், ரவிக்குமார், ரவிக்குமாரின் மனைவி இளவரசி ஆகியோரும் சேர்ந்துகொண்டனர். இவர்கள் ஐந்து பேரும் ஒன்றாக காரில் சங்கரன்கோவிலுக்கு வந்தவுடன் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கயிற்றால் கழுத்தை இறுக்கி மாரிமுத்துவைக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் இந்தக் கொலையை மறைக்க மாரிமுத்துவின் உடலை சாக்கில் வைத்து, அதோடு கல்லையும் கட்டி காரில் கொண்டு வந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தில் புனல்வேலி கண்மாயில் வீசிச் சென்றுள்ளனர். தற்போது பிடிபட்டவர்கள் அடையாளம் காட்டிய கண்மாயில் சடலத்தைத் தேடியபோது அழுகிய நிலையில் சாக்கு மூடையில் மாரிமுத்துவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கண்மாய்க் கரையிலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவத்தில் மாரிமுத்து காணாமல்போனதாக கும்மிடிப்பூண்டியில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், அவரின் உடல் மீட்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் என்பதால் எந்த மாவட்ட காவல்துறை விசாரணையை மேற்கொள்வதென உயரதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். மாரிமுத்து கொலை தொடர்பாக புகார் பெறப்பட்டு வில்வதுரை, ராகுல் ராஜ் என்ற இசக்கிராஜ், ரவிக்குமார், அவருடைய மனைவி இளவரசி, ராகினி ஆகிய ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்றார்கள்.

இந்தச் சம்பவத்தால் தளவாய்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையிலான போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

Leave a Comment