காதல் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை டிரம்மில் அடைத்து தலைமறைவு ஆகிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள எஸ். பி ஆர் ஹில்ஸ் பகுதியில் அனில்குமார் என்பவர் தன்னுடைய இரண்டாவது மனைவி சரோஜா உடன் வசித்து வருகிறார். இரண்டு பேருக்கும் ஆறு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. அனில் குமாருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அவர் மரணம் அடைந்து விட்டார்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக சரோஜாவை காதல் திருமணம் செய்து கொண்டார் அனில்குமார். முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகளில் இருந்து வந்தன.
இந்த நிலையில் தாய் வீட்டுக்கு சென்ற சரோஜா ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்தார். ஆனால் இரண்டு பேருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மனைவியை அடித்து கொலை செய்த அனில்குமார் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள டிரம் ஒன்றில் அடைத்து பின்னர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
தாயார் சரோஜாவிற்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அனில்குமாருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சரோஜாவின் குடும்பத்தார் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ரத்த கறைகள் காணப்பட்டன.
அங்கிருந்த டிரம்மை திறந்து பார்த்தபோது அதில் சரோஜாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அனில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.