ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காது.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் வரைவில் ஜனாதிபதி தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என தெரிவித்தார்.
அமைச்சர் ராஜபக்ஷவின் பிரேரணையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளடக்கப்படவில்லை.
ஜனாதிபதியை பாராளுமன்றம் நியமித்து பிரதமரின் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறான பிரேரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டை நடத்துவதில் பொதுமக்களை ஈடுபடுத்த அனுமதிக்கும் தேசிய கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உட்பட எட்டு பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட தேசிய சபை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட அந்தந்த துறைகளில் தகுதி வாய்ந்த நிபுணர்களை சபை மேலும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசியல் வாதிகள் சுயநலன் கருதி கட்சி மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.