‘கோட்டாகோகம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொதுஜன பெரமுன குண்டர்களை கலைக்க கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் தமக்கு அறிவித்ததாக மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாக பகிரங்கப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன.
ஜனாதிபதியின் தலையீட்டினால் தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு காரணமாக அலரிமாளிகையில் கூடிய சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
“சம்பவம் நடந்தபோது நான் அலரி மாளிகையில் இருந்தேன். அன்று ராஜினாமா செய்ய இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டோம்.
போராட்டக்காரர்கள் தாக்கப்படுவார்கள் என்று தெரிந்தவுடன் டிஐஜி தென்னகோனுக்கு போன் செய்தேன். அனைத்து வீதித் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்க வருபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் என்னிடம் கூறினார்.
அதன்பிறகு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். நான் அங்கு செல்லும் வழியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாரதூரமான சம்பவம் ஒன்று நடக்கவிருக்கிறது, அதனை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கூறும்படி தெரிவித்தார்.
பாரதூரமான சம்பவம் ஒன்று நடக்கப் போகிறது, தயவு செய்து உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என்று ஜனாதிபதியிடம் கூறினேன். பின்னர், ஜனாதிபதி பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
தாக்குதல் நடத்தியவர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் தனக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். அப்போது ஜனாதிபதி, ‘நான்தான் ஜனாதிபதி. அதை நிறுத்தச் சொல்கிறேன்’ என்றார் . அப்போதுதான் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் தலையீடு இல்லாவிட்டால், சேதம் இன்னும் மோசமாகியிருக்கும், ”என்று அவர் கூறினார்.
கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலில், அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் பத்து வீதமானவர்கள் மாத்திரமே பங்குபற்றியதாகவும், தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்கள் திரும்பி வரும்போது துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை அல்லது நீர்த்தாரை பிரயோகிக்கவில்லை எனவும் அதுவே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் கூறினார்.
“இந்த ‘கோட்டாகோகம’ போராட்டம் சுமார் ஒரு மாத காலமாக எந்தவிதமான தாக்குதலும் இன்றி நடைபெற்று வருகிறது. அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ அவர்களைத் தாக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
சம்பவம் நடந்த மாலையில் அவர்களது வீடுகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தீவைப்புச் செயல்களைத் தடுக்க பொலிஸாரும் இராணுவமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தவர்,. “எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மே 9 தாக்குதலுக்குப் பிறகு வன்முறையில் தொடர்புடையவர்கள் தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும் விரைவில் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்கும்போது சட்டத்தரணிகள் கைதட்டுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.