காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது-
காணாமல் போனோரின் உறவுகளுக்கு அரசினால் ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் யோசனையை நீதி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.இந்த நாட்டின் நீதி அமைச்சர் காணாமல் போனோர் தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனை ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற விடயமாகும் என்பதுடன் தமிழர்களை இவர்கள் எவ்வாறு எந்தளவுக்கு வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த நீதி அமைச்சர் வெளியிட்டிருப்பது ஒரு வேதனையான கவலையான விடயமாகும்.
அதேவேளை தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதி என்ற அடிப்படையில் இவர்கள் கையாளுகின்ற விடயத்திற்கு நான் மனவேதனையுடன் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
-பா.டிலான்-