இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 175 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து, இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 108 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாடிய அந்த அணியை ஜடேஜா தனது பந்துவீச்சினால் மிரட்டினார். பதும் நிசங்கவை தவிர, எந்த வீரர்களையும் இந்திய பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆகவிடவில்லை. இதனால் மதிய உணவு இடைவேளை முன்பாக 174 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பொலோ ஓன் பெற்றது
இலங்கை. இலங்கை தரப்பில் பதும் நிசங்க மட்டுமே 61 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல் அஸ்வின், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 390 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இதன்பின் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ஒவ்வொரு வீரர்களாக வரிசையாக நடையை கட்டினார்.
கடைசிநேரத்தில் இலங்கையின் விக்கெட் கீப்பர் டிக்வெல்ல பவுண்டரிகளாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் கடந்த அவருக்கு கைகொடுக்க மற்ற வீரர்கள் தவறினர். இதனால் இலங்கை அணி 178 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக டிக்வெல்ல 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய வீரர் புதிய சாதனை படைத்தார். இன்று மூன்றாவதாக அஸ்வின் விக்கெட் எடுத்தது டெஸ்ட் கரியரில் அவரின் 435வது விக்கெட் ஆகும். இதன் மூலம் கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.
85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் 227 இன்னிங்ஸில் 434 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வின் 159 இன்னிங்ஸிலேயே அந்த சாதனையை முறியடித்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளார். இப்போது அவருக்கு அடுத்த நிலையில் 436 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
ஜடேஜாவின் புதிய சாதனை
முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தார் ரவீந்திர ஜடேஜா. துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஜடேஜா பந்துவீச்சிலும் தனது மாயாஜாலத்தை காட்டத் தவறவில்லை. பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்து களத்தில் ஒன்மேன் ஷோ காண்பித்தார். இதன் மூலம் ஒரே டெஸ்ட்டில் சதத்துடன், ஐந்து விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் இம்ரான் கான், ஷஹிப் அல் ஹசன் போன்ற நான்கு வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதேபோல் 7வது வீரராக அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இதற்கு முன் முன்னாள் கப்டன் கபில்தேவ் வசமிருந்தது.1986 இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7வது வீரராக களமிறங்கி கபில் தேவ் 163 ரன்கள் குவித்திருந்தார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்தார். 7வது வீரராக இறங்கி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்து 35 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.