கோட்டபாய அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதற்காகவே தமிழ் தரப்புக்கள் 13 ஆவது திருத்த சட்டத்தை கோருகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கம் நாட்டிற்கு ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பானது நான்காவது அரசியலமைப்பாக கொண்டு வரப்பட இருக்கின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து மூன்று அரசியல் யாப்புக்கள் நடைமுறையில் இருந்துள்ளன. மூன்று அரசியல் யாப்புக்களும் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கள். அதற்காரணமாகவே தமிழர்கள் அதனை நிராகரித்து வந்துள்ளார்கள்.
வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களது தேசம், சுயர்நிணயம், அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வு வேண்டும். இத்தகைய ஒரு பின்னனியில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு கோட்டபாய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அந்த நிபுணர் குழு ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபை நிறைவு செய்துள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் அதனை எதிர்த்து வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
துரதிஸ்ட வசமாக ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டியை வலியுறுத்த வேண்டிய தமிழ் தரப்புக்கள் கடந்த ஜனவரி மாதத்தில் 7 பேர் கையொப்பமிட்டு மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரியுள்ளார்கள். கோட்டபாய அரசாங்கம் நாட்டிற்கு புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான பூர்வ நடவடிக்கைகளை முடிந்திருக்கின்ற நிலையில் இவ்வாறு ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு கோருவது என்பது இதை சாட்டாக வைத்து வரவிருக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள தமிழ் தரப்புக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
13 வது திருத்தச் சட்டம் 1987 ஆம் ஆண்டிலேயே தமிழர்களால் நிராகிகிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் நிராகரிக்கப்பட்டது. சம்மந்தன் கூட அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கையொப்பம் இட்டிந்தார்.
34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து, இறந்து போன ஆவணமாகவும், பிணமாகவும் இருக்கின்ற 13 வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது தமிழர்களின் அரசியலமைப்பை ஒன்றையாட்சிக்குள் அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்குள் முடக்குகின்ற சதி நடைவடிக்கையாகும். அதற்கு எதிராக நாங்கள் மக்கள் மட்டத்தில் விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாட்டை முன்னெடுத்து இருகின்றோம்.
அந்தவகையில் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் பேரணி ஒன்றை செய்திருந்தோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாகவோ அல்லது ஆரம்ப புள்ளியாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக வடக்கு – கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வு வேண்டும். அதற்காக சமஸ்டியுடன் கூடிய புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகக இந்தியாவும், சர்வதேச சமூககமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் திரண்டு கோரிக்கை முன் வைத்துள்ளார்கள். அத்தோடு புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருந்தால் தமிழ் தலைமைகள் அதனை ஆதரிக்க கூடாது எனவும் அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனவும் மக்கள் அந்தப் Nபுரணியின் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதற்கான மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்று வருகிறது. 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு தாண்டிகுளம் புகையிரத நிலையம் முன்பாக ஐயனார் விளையாட்டு மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறும். இந்த பேரணிக்கு ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க மக்கள் ஆயிரம் ஆயிரமாய் திரண்டு வர வேண்டும். தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், விக்கினேஸ்வரன் அணி, சிறிகாந்தா அணி ஆகிய தரப்புக்கள் இணைந்து மேற்கொள்ளும் இந்த சதி முயற்சியை முறியடிக்க ஒன்று திரண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.