14 வயதான சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய உறவினரான பெண்ணையும், அந்த சிறுமியுடன் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்த 38 வயதானவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2 வருடமாக சிறுமி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, உறவுக்கார பெண்ணொருவர் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராண்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதான பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று இவ்வாறு விபசாரத்துக்கு விற்றுள்ளார்.
இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் சந்தேகநபரான அப்பெண், வர்த்தகர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
12 வயதில் இருந்தே, அச்சிறுமியை இவ்வாறு இரண்டு வருடங்களாக, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது செய்யப்படவுள்ளனர். இறுதியாக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சிறுமியுடன் இருந்த 38 வயதான ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.