தனக்கு புற்றுநோய் இருப்பதாக தெலுங்கு நடிகை ஹம்ச நந்தினி அறிவித்துள்ளார்.
தெலுங்கில் ‘லெஜண்ட், ‘பந்தம்’ அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஹம்ச நந்தினி, கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஹம்ச நந்தினி தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனது மார்பகத்தில் சிறிய கட்டி இருப்பதை உணர்ந்தேன். அதை பரிசோதனை செய்து பார்த்ததில் புற்றுநோய் இருப்பது உறுதியானது. நான் மிகவும் பயந்தேன். 18 வருடங்களுக்கு முன்பு எனது அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதிலிருந்து பயத்தில் வாழ்ந்து வந்த நான் தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் மார்பகத்தில் இருந்த கட்டியை அகற்றி விட்டனர். இருப்பினும் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மருத்துவர்கள் ஹீமோதெரபி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து 9 முறை ஹீமோதெரபி செய்துகொண்டுள்ளேன் இன்னும் 7 முறை செய்ய வேண்டியிருக்கிறது.
விரைவில் இந்த நோயிலிருந்து குணமடைந்து வருவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது தற்போதைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை ஹம்ச நந்தினி விரைந்து குணமடைய ரசிகர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.