அண்மையில் இடம்பெற்ற வீட்டு எரிவாயு சிலிண்டர் தீ மற்றும் வெடிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு, விசாரணை அறிக்கைகளை பதிவு செய்து முடித்துள்ளது.
குழுவின் தலைவரான மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இறுதி அறிக்கை தொகுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் புதன்கிழமைக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதற்கான திகதி மற்றும் நேரம் கிடைத்தவுடன் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 40 பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எரிவாயு நிறுவனங்கள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் எரிவாயு கசிவுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் உள்ளிட்ட தரப்புக்களிடமே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.