27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
கிழக்கு

வடிவேலுவின் காமெடிகளையே தூக்கிச்சாப்பிடும் சாணக்கியன்; முஸ்லிம் மக்களிற்கு தமது அரசியலை பார்க்கத் தெரியும்: எம்.எச்.எம். இப்ராஹிம்!

சாணக்கியன் எம்.பி அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படும் முஸ்லிம் எம்பிக்களின் மீது கூடுதல் கரிசனை எடுத்துபேசுவதை பார்க்கின்றபோது வடிவேலுவின் காமடி நடிப்பும் இவரிடம் தோற்றுவிடும் போல்தான் உள்ளது. முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது சரியா பிழையா என்பது வேறுவிடயம், ஆனால் அது பிழையென்று சொல்வதற்கு இவர் யார் என்று கேட்கவேண்டியுள்ளது. முஸ்லிம் எம்பிக்களுக்கு வாக்களித்தது நூறுவீதம் முஸ்லிம்கள்தான், சாணக்கியனின் சமூகத்தை சேர்ந்த மக்களோ அல்லது சிங்கள மக்களோ அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்கின்றபோது முஸ்லிம் எம்பிக்கள் செயல்படுகின்ற விதம் குறித்து சாணக்கியன் எம்பி மட்டும் முதலைக்கண்ணீர் வடிப்பதன் நோக்கம் என்ன? என்று சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் அறிக்கையொன்றினூடாக கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

முஸ்லிம் உறுப்பினர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு செயல்படவே முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தங்களது சமூகம் சார்ந்து சுதந்திரமாக முடிவெடுத்து செயல்பட பூரண அதிகாரம் அவர்களிடம் உண்டு, அவர்கள் தவறு செய்வார்களாக இருந்தால் அடுத்த தேர்தலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்வார்கள் என்கின்ற போது சாணக்கியன் எம்.பிக்கு முஸ்லிம் உறுப்பினர்களை கேள்வி கேட்க என்ன அதிகாரம் உள்ளது என்பதை அவர் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சாணக்கியன் எம்.பி முஸ்லிம் எம்.பிக்களை நோக்கி கேள்வி கேட்பதைபோன்று முஸ்லிம் உறுப்பினர்களும் சாணக்கியன் எம்.பியையும், அவர் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர்களையும் நோக்கி கேள்வி கேட்கவோ அதிகாரம் செலுத்தவோ அனுமதித்தால் முஸ்லிம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடவேண்டிவரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

உதாரணமாக, தமிழ் அரசியல்வாதிகளாகிய உங்களால் தமிழ் சமூகத்துக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் என்ன? பாராளுமன்றத்திலே அரசாங்கத்துக்கு எதிராக கோசம்போடும் நீங்கள் தனிப்பட்ட முறையில் அரச உயர்மட்டங்களை சந்தித்து உங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவது ஏன்? நீங்கள் தனிநாடு அல்லது சுயாட்சி கேட்டு போராடுவது போன்று நடிப்பதால் தமிழ் சமூகம் பாதிக்கப்படுகின்றது என்று முஸ்லிம் உறுப்பினர்கள் உங்களை நோக்கி குற்றம்சாட்டினால் உங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் அரசாங்கத்தை வழி நடத்தியவர்களே நீங்கள்தான், அது மட்டுமல்ல எதிர்க்கட்சி பதவியும் உங்களிடம்தான் இருந்தது இவ்வளவு அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு தமிழ் சமூகத்துக்கு உங்களால் பெற்றுக்கொடுத்த உரிமை என்னவென்று பட்டியலிட முடியுமா? வெளியே அரசாங்கத்தை எதிர்த்து பேசுகின்றீர்கள் உள்ளே அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றீர்கள் என்று குற்றம்சாட்டிய கனடா வாழ் தமிழ் மக்கள் உங்களை விரட்டியடித்ததை உங்களால் மறுக்க முடியுமா?

நல்லாட்சியில் பதினைந்து உறுப்பினர்களை வைத்திருந்த உங்கள் கட்சி இப்போது எட்டு உறுப்பினர்களாக சுருங்கியதற்கு என்ன காரணம் என்று உங்களால் கூற முடியுமா? ஆக தமிழ் சமூகத்தை ஏமாற்றி அரசியல் செய்யும் உங்களுடைய கட்சியினரை தமிழ் மக்களே நிராகரித்து வருகின்ற நிலையில் முஸ்லிம் மக்களைபற்றி கவலைப்பட உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று முஸ்லிம் உறுப்பினர்கள் உங்களை நோக்கி கேள்வி கேட்டால் உங்களது நிலை என்னவாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

ஆகவே, சாணக்கியன் எம்.பியோ அல்லது அவர் சார்ந்த கட்சியினரோ முஸ்லிம் மக்கள் நூறுவீதம் ஆதரித்து பாராளுமன்றம் வந்த முஸ்லிம் உறுப்பினர்களை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது,அவர்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை ஆதரிக்ககூடாது என்று தீர்மானம் எடுத்து செயல்பட பூரண சுதந்திரம் அவர்களிடம் உண்டு, அதனை கேள்வி கேட்கும் உரிமை முஸ்லிம் மக்களிடம் மட்டுமே உண்டு என்பதை நீங்கள் மறந்து செயல்பட நினைக்ககூடாது. முஸ்லிம் உறுப்பினர்கள் தவறு செய்தால் அதனை அவர்களது கட்சியோ அல்லது அவர்கள் சார்ந்த மக்களோ அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கே உரியது, மாறாக உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் நிம்மதியிழந்தே வாழ்கின்றார்கள் அதற்கு உங்களால் எப்படி செயல்பட முடியும் என்று சிந்திப்பதற்கே உங்களுக்கு நேரகாலம் போதாமல் இருக்கின்றபோது முஸ்லிம் உறுப்பினர்களை நோண்டுவதற்கு உங்களுக்கு அவசியம் என்னவென்று நாங்கள் கேட்கிறோம்.

உங்களுடைய நோக்கமெல்லாம் முஸ்லிம் உறுப்பினர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செயல்பட்டால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள கள்ள உறவை பயன்படுத்தி கல்முனை பிரச்சினை தொடக்கம் மற்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வை பெற்றுக்கொள்வதும், அத்தோடு முஸ்லிம் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை எதிர்க்கின்ற நிலையொன்று ஏற்படுமாக இருந்தால் அதனை பயன்படுத்தி, அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கின்ற உங்கள் தமிழ் உறுப்பினர்களை வைத்து முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கத்தை எடுக்கவைத்து அதன் மூலம் உங்களது திட்டத்தை நிறைவேற்றி கொள்வதேயாகும். முடிந்தால் வடகிழக்கை இணைத்து அதில் நீங்கள் முதலமைச்சராக வருவது என்ற கற்பனை திட்டமும் உங்களிடம் உள்ளது என்றும் கூறலாம். இதற்கெல்லாம் முஸ்லிம் உறுப்பினர்கள் தடையாக இருப்பதே உங்களுக்கு உள்ள ஒரே கவலையாகும். இந்த நாடகத்தை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?

east tamil

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

வாழைச்சேனையில் கிராமசேவகர் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம்

Pagetamil

இலங்கை மீண்டும் சிக்கியுள்ளது – கோவிந்தன் கருணாகரம்

east tamil

மட்டக்களப்பில் திறக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயம்

east tamil

Leave a Comment