அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியால் நியமிக்பகப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற செயலணியின் கூட்டமானது செயலணித் தலைவர் ஞானசாரதேரர் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களஙகளின் நடவடிக்கை, பௌத்த விகாரரைகளை அமைப்பது, எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சனை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சனை தொடர்பில் பேசியிருந்தேன்.
அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தி கிடைத்தது. இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள். மகாவம்சத்தில் தமிழ் பௌத்த துறவிகள் இருந்தமைக்கான ஆதாரம் உண்டு. தமிழ் மக்களின் வழிபாட்டுக்கான உரிமை மறுக்கப்படும் இடங்களை பார்வையிடுவதாக தெரிவித்தார். அத்துடன் குருந்தூர் மலையில் பௌத்த சின்னம் இருக்கிறது எனத் தெரிவித்தார். அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் சிவனுக்கும் அங்கு சிலை இருந்தது. அது பின்பு தமிழர்களால் அகற்றப்பட்டு முருகனுக்கான வழிபாடு அதன் பின் பிள்ளையார் வழிபாடு இடம்பெற்றது. அது மக்களின் அறியாமையால் நடந்தது. தொல்பொருள் ரீதியில் எமக்கும் அங்கு உரிமை உள்ளது எனத் நான் தெரிவித்த போது, கதிர்காமம் போன்று இரு மதத்தினரும் வழிபடக் கூடிய நிலை வருவதனை தான் விருப்புவதாக தெரிவித்தார்.
விரும்பியோ விரும்பாமலே எமது பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமையப் போகின்றன. 1600 இற்கு மேற்பட்ட கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்தவித நடவடிக்கைகளுகம் இல்லை. பலமான எதிரியை நாம் எதிர்க்க முடியாது. அதனால் நாம் இணைந்து வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்.
மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். படுகொலைகள் பல நடந்தன. அதனை நாம் அன்றாடம் நினைவு கூர முடியாது. இதனை ஒரே வாரத்தில் செய்கின்றோம் என தெரிவித்தேன். இதன்போது இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்சனைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும் எனக் கூறினார். இதைவிட பிரச்சனையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார்.
அதேநேரம் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் நோக்கமாக நான் உணர்வது, யாழ்ப்பாண தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இருக்கும் சரிஜா சட்டத்தை இல்லாதொழிக்கப்போகிறார்கள். சைவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான உக்கிரத்தை ஏற்படுத்தி இன்னுதொரு குளிர்காய்த்தல் நிகழ்வை நடத்தப் போகிறார்கள். கிறிஸ்தவ மற்றும் சைவ மோதலை ஏற்படுத்தக் கூடிய அத்தனை விடயங்களும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் ஊடாக பெறப்படுகிறது. இது தான் இதன் நோக்கமாக இருக்கும் என நான் நம்புக்கின்றேன். கிறிஸ்தவர்கள், சைவர்களுக்கான பிரச்சனைகளுக்கு நீண்ட நேரம் கொடுக்கிறார்கள். அதனை தேடி தேடி எழுதிகிறார்கள். எனவே மக்கள் தமது பிரச்சனைகளை பேசுங்கள். அவர்களின் நிகழ்சி நிரலில் பலிகடா ஆகிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.