வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 8வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி எனும் பெண்ணின் உடல்நிலை திடீர் என மோசமடைந்ததால் 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.